Published : 10 Sep 2024 05:33 PM
Last Updated : 10 Sep 2024 05:33 PM
மதுரை: அரசுத் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால், அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை எச்சரித்தார்.
மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டங்களில் துறையின் செயலாளர்கள், மாவட்ட அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்டு விவாதம் நடத்தப்படும். முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும், சரியாக செயல்பட அதிகாரிகளை எச்சரிப்பதற்காக சில கேள்விகள் முன்தயாரிப்பு இல்லாமல் கேட்கப்படும். ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்ற மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
உதயநிதி மதுரைக்கு வருவதற்கு கடந்த சில நாட்களுக்கு முன் அவரது குழுவினர், மதுரை வந்து மாவட்டத்தில் செயல்படுத்தப் படும் அரசுத் திட்டங்கள் நிலைபாடுகள், அவை செயல்படுத்தப்படும் விதம், கலைஞர் நூலகம், பள்ளிக்கல்வித் துறை, மாநகராட்சி, வருவாய்துறை போன்ற அனைத்து அரசுத் துறைகளிலும் குறைபாடுகளை எடுத்து, அதற்கான ஆதாரங்களையும், புள்ளி விவரங்களையும் சேகரித்துச் சென்றனர்.
அந்தக் குழுவினர் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு, அமைச்சர் உதயநிதி ஆய்வு நடத்தினார். சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை சார்பில் இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி, தன்னிடமிருந்த புள்ளி விவரங்கள், ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு ஆட்சியர் சங்கீதா முதல், தாசில்தார் வரை ஒவ்வொரு துறை அதிகாரிகளிடம் 5 கேள்விகளை முன்வைத்தார்.
உதயநிதியின் இந்த எதிர்பாராத நடவடிக்கையால் முன்தயாரிப்புடன் சென்ற அதிகாரிகள், அவர் ஆதாரத்துடன் கேட்ட கேள்விகளுக்கும், குறைபாடுகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் தினறினர். தனது கேள்விகளால் மட்டுமே பிரச்சினையின் வீரியத்தையும், முக்கியத்துவத்தையும் புரியவைத்த உதயநிதி, அதே சமயம் எந்த அதி்காரியிடமும் கண்ணியக் குறைபாட்டைக்காட்டாமல் சிரித்த முகத்துடனே கேள்விகளை அனுகினார்.
இந்தக் கூட்டத்தின் போது, திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்திய அரசுத் திட்டங்கள் பொதுமக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படுகிறதா, அது குறித்த பயனாளிகளின் கருத்துக்கள் என்ன? என்ற கேள்விகளை உதயநிதி எழுப்பினார். மேலும், கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் நிலை, இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் வெற்றி போன்றவை குறித்தும் அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டார்.
இது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில், "ஆய்வுக் கூட்டத்தில் கலைஞர் நூலகம், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள், பள்ளிக் கல்வி போன்றவை குறித்தான கேள்விகள் பிரதானமாக இருந்தது. ‘கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் ஏன் ப்ளஸ்-1ல் சேரவில்லை?’ என்ற உதயநிதி, ‘அப்படி பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்கள் எண்ணிக்கையை கையில் வைத்துக் கொண்டு முதன்மை கல்வி அலுவலரை எழுப்பி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க என்ன நடவடிக்கை எடுத்து இருந்தீர்கள், எதற்காக அவர்கள் பள்ளியில் சேரவில்லை, உயர் கல்வியில் சிறந்து விளக்கும் தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது?’ என எச்சரித்தார்.
தொடர்ந்து அவர், ஒவ்வொரு பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். அதன் பிறகு ஆட்சியர் சங்கீதாவிடம், ‘கலைஞர் நூலகத்திற்கு எத்தனை முறை ஆய்வுக்கு சென்றுள்ளீர்கள், ஏன் தொடர்ச்சியாக ஆய்வுக்கு செல்லவில்லை?’ என்று கேள்வி கேட்டார். ஆட்சியரின் பதிலில் திருப்தியடையாத அவர், ‘கலைஞர் நூலகம் முதல்வரின் கனவுத் திட்டம். அங்கு எந்த ஒரு குறைபாடும் இருக்கக் கூடாது’ என்றுக் கூறி சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ‘இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று கேட்டார்.
தொடர்ந்து அவர், ‘கலைஞர் நூலகத்திற்கு வாசகர்களின் வருகையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மோசமான சூழலால் வருகை குறையக்கூடாது. இந்த நூலகத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம் சிதைந்துவிடக் கூடாது. கலைஞர் நூலகம் திறந்து ஓராண்டாகியும் அங்குள்ள கேண்டினை இன்னும் திறக்கவில்லை. நூலகம் திறந்து ஓராண்டாகியும் முன்னேற்றம் இல்லை. கலைஞர் நூலகம் பிரச்சினைகள் இனி தீவிரமாக பார்க்கப்படும். திரும்பவும் ஆய்வுக்கு வருவேன். மீண்டும் இதுபோன்று இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.
மேலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை ரேண்டமாக எடுத்து அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அதிகாரிகள் கூறிய பதில் சரியா என்பதை, சம்பந்தப்பட்ட மனு கொடுத்த நபரிடம் ஆய்வுக் கூட்டதிலேயே போனில் தொடர்பு கொண்டு ‘தங்கள் பிரச்சினை சரியாகவிட்டதா?’ எனக்கேட்டார். அதுபோல், மதுரையில் உள்ள ஒரு அரசு விடுதியைக் குறிப்பிட்டு, ‘அந்த விடுதி மாணவர்கள் தங்கும்படி இல்லை’ என்று சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்’’ என்றார்.
மாவட்டத்தில் உள்ள குறைபாடுகள் தங்களுக்கே தெரியாத நிலையில் அதனை ஆதாரத்துடன் எடுத்து வந்து அமைச்சர் உதயநிதி ஆய்வுக் கூட்டத்தில் கேட்ட கேள்விகளால் மதுரை மாவட்ட அதிகாரிகள் கலக்கமடைந்துபோய் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT