Published : 10 Sep 2024 04:11 PM
Last Updated : 10 Sep 2024 04:11 PM
சென்னை: “அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை முன்னெடுத்தவர் த.வெள்ளையன். ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட வியாபாரிகளின் நலன்களுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடிய களப் போராளி அவர்,” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் சகோதரர் த. வெள்ளையன் உடல் நலக்குறைவால் நம்மை விட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். தமிழ்நாடு வணிகர்களின் முன்னேற்றத்துக்கு அரும்பாடுபட்டவர். வணிகர்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக கூட்டமைப்பை உருவாக்கி அதனை பரவலாக்கிய முன்னோடியாக அவர் விளங்கினார்.
அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை முன்னெடுத்தவர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட வியாபாரிகளின் நலன்களுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடிய களப்போராளி. மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்தவரும் களத்தில் உறுதுணையாக நின்றவருமான வெள்ளையனின் மறைவு ஈடு செய்ய முடியாதது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மாநில முழுவதும் வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்தை நடத்திய சமூக அக்கறை கொண்ட மனிதர். அவரை பிரிந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வணிகர் சங்க பொறுப்பாளர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT