Published : 10 Sep 2024 10:47 AM
Last Updated : 10 Sep 2024 10:47 AM
சிகாகோ: ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு பின்வருமாறு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 9.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஜாபில் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கும் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, முதல்வர் முன்னிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 4350 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 9.9.2024 அன்று சிகாகோவில், ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல்வர் ன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விவரங்கள்:
ஜாபில் நிறுவனம் (Jabil Inc.) ஜாபில் நிறுவனமானது, ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குபவர்களில் முன்னணி நிறுவனமாகும்.
தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 2000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சிராப்பள்ளியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் (Rockwell Automation) ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான (Industrial Automation and Digital transformation) உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆட்டோடெஸ்க் நிறுவனம் (Autodesk) ஆட்டோடெஸ்க் நிறுவனமானது ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
முதல்வர் முன்னிலையில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment