Published : 10 Sep 2024 05:11 AM
Last Updated : 10 Sep 2024 05:11 AM
சென்னை: சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்காக நிதியை மறுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் ஒரு விஷயத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக இருப்பது அரசியல் சாசன உணர்வுக்கும் ஓர் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கும் எதிரானது. பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்திய மக்களின் ஒட்டுமொத்த அறிவும் அடங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?
அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துஉள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...