Published : 10 Sep 2024 04:51 AM
Last Updated : 10 Sep 2024 04:51 AM
சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.730 கோடி குத்தகை பாக்கி தொகையை செலுத்தாததால், அந்த வளாகத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கின் விசாரணையின்போது, குத்தகையை ரத்து செய்த கையுடன் உடனடியாக போலீஸாரை குவித்து சுவாதீனம் எடுத்தது சட்ட விதிமீறல் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, இதுதொடர்பாக முறையாக தனித்தனியாக நோட்டீஸ் பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னையில் குதிரைப் பந்தயம் நடத்த ஏதுவாக கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு கடந்த 1945-ம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் அரசு நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 மார்ச் 31-ம் தேதி வரை உள்ளது. இந்த நிலத்தில் குதிரைப்பந்தய மைதானம் அமைக்க குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு ரூ.614.13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1970 டிச.18 முதல் இந்த குத்தகை வாடகையை உயர்த்துவது தொடர்பாக மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த 1945-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது.
அதையேற்க மறுத்த தமிழக அரசு கடந்த 1970 முதல் 2004 வரையிலான காலகட்டத்துக்கு குத்தகை வாடகை பாக்கி தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297-ஐ செலுத்தும்படி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்தாண்டு மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவில், “அரசு நிலங்களின் குத்தகை வாடகையை உயர்த்துவதும், பொதுநலனுக்காக குத்தகையை ரத்து செய்வதும் அரசின் கொள்கை முடிவு. அந்த முடிவு சட்டவிரோதமானது எனக்கூற முடியாது. குத்தகைக்கு விடப்பட்ட நிலமாக இருந்தாலும் சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகையை உயர்த்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. .
எனவே மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டிய ரூ.730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை போலீஸாரின் துணையுடன் மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக பயன்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட குத்தகையை நேற்று ரத்து செய்த தமிழக அரசு நேற்று காலை போலீஸாரின் துணையுடன் நிலத்தையும் சுவாதீனம் எடுத்து சீல் வைத்தது.
இதை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசர வழக்காக நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரேஸ் கிளப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, இன்று (நேற்று) காலை குத்தகையை ரத்து செய்து உடனடியாக சுவாதீனமும் எடுத்துள்ளனர். ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி, இதுதொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.
அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆகியோர், பொது பயன்பாட்டு நோக்கில்தான் அந்த நிலத்துக்கான குத்தகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு அனுமதியும் பெறாமல் அங்கு குதிரைப்பந்தயம் நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டும் ரூ.730 கோடி குத்தகை வாடகை பாக்கியை செலுத்தவில்லை. அங்கு பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ரேஸ் கிளப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என குற்றம்சாட்டினர். அரசாணையை படித்துப்பார்த்த நீதிபதிகள், இன்று காலையில் குத்தகையை ரத்து செய்துள்ளீர்கள்.
பிறகு எப்படி உடனடியாக சுவாதீனம் எடுத்து சீல் வைத்தீர்கள்? அரசின் இந்த சட்ட விதிமீறல்களுக்கும், அத்துமீறல்களுக்கும் நாங்கள் துணையாக இருக்க முடியாது. ரேஸ் கிளப் நிர்வாகம் நிலத்தை காலி செய்து கொடுக்க அவகாசம் வழங்க வேண்டாமா? என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதன்பிறகு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அந்த நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்வது குறித்தும், நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்தும் முறையாக தனித்தனியாக நோட்டீஸ் பிறப்பித்து, உரிய கால அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக 15 நாட்களுக்குள் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு புதிதாக நோட்டீஸ் பிறப்பித்து, அதன்பிறகு காலி செய்து கொடுக்க உரிய அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர். அதுவரை கிளப் நிர்வாகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...