Published : 09 Sep 2024 04:57 PM
Last Updated : 09 Sep 2024 04:57 PM

இந்தியா - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்த தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில் வேல்

ராமேசுவரம்: நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கும் இந்திய - இலங்கை இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைவில் மீண்டும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில் வேல், ராமேசுவரத்தில் இன்று ’இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியது: “1983-ஆம் ஆண்டு துவங்கி இப்போது வரையிலும் இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள், ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதல்களுக்கும், உடல் ஊனப்படுத்தப்பட்டும், பலர் படகுகளை இழந்து வாழ்க்கையை பறிகொடுத்து உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான திட்டங்களை கையாளவில்லை. இதனால் பிரச்சினை மேலும் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.

இலங்கையை ஒட்டியுள்ள, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் தான் தமிழகத்தின் 80 சதவீத மீன்பிடிப்பு உள்ளது. இந்த இரண்டு கடல் பகுதிகளும் மிகவும் குறுகிய எல்லை கொண்டவை. இந்தப் பகுதிகளில் தொன்றுதொட்டு இருநாட்டு மீனவர்களும் மீன் பிடித்து வந்தனர். இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை: இருநாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள மீனவர்களை கொண்ட பேச்சுவார்த்தை, கடந்த 2010 துவங்கி பல கட்டங்களாக நடைபெற்றது. கடைசியாக 2016 நவம்பரில் டெல்லியில் அன்றைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையில், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இழுவலைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறுத்திக் கொள்வது எனவும், அத்தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு மாற்றுத்திட்டங்களை மத்திய அரசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதுவரை இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதியில் எந்த ஒரு மீனவர்கள் மீதும் தாக்குதல் தொடுக்க கூடாது, கைது செய்யக் கூடாது, படகுகளை சேதப்படுத்தக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை கண்காணிக்க இரு நாட்டு உயர் அதிகாரிகள் கொண்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது. அந்தக் குழுவும் பெயரளவில் இரண்டு முறை கூடியது.

இரு நாட்டு மீனவர்களுடைய பேச்சுவார்த்தை: இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்ட பேச்சுவார்த்தை எல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் இழுவலைகளை படிப்படியாக குறைக்க மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்தது. இதுவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் போனதற்கு காரணமாகவும் அமைந்தது.

கோடிக் கணக்கில் அபராதம்: கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்டுக் கொடுப்பதுடன், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யவும் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, விரைவில் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும்” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x