Published : 09 Sep 2024 03:13 PM
Last Updated : 09 Sep 2024 03:13 PM

“இபிஎஸ் உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை” - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் | கோப்புப்படம்

தஞ்சாவூர்: “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒன்றிணையக் கூடாது என விரும்பாதவர்கள் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும். 2026-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்,” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான ஆர்.வைத்திலிங்கம் இன்று (செப்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒன்றிணையக் கூடாது என விரும்பாதவர்கள் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா என்பது அதிமுக ஒன்றிணையும்போது முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒற்றுமையாகும். 2026-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

கடந்த தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கொண்டுதான் பழனிசாமி அதிமுகவை அழித்து விடுவார் என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையும் அதுதான். கடந்த 2021-ம் ஆண்டில் அமமுக, தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என நானும், நத்தம் விசுவநாதனும் வற்புறுத்தினோம். அன்றைக்கு அதிமுக தனித்து நின்றே 150 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என பழனிசாமி கூறி எல்லோரையும் ஏமாற்றினர்.

மக்களவைத் தேர்தலிலும் பெரிய மகா கூட்டணி உருவாகும், நாம் 40 சதவீதம் வெற்றி பெற்று விடலாம் என கூறினார். ஆனால், 20 சதவீதம் அளவுக்குப் பெற்று, இன்றைக்கு மோசமான நிலைக்கு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளதை நினைத்து தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார். அவரும், எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x