Published : 09 Sep 2024 11:03 AM
Last Updated : 09 Sep 2024 11:03 AM

திமுக பவளவிழா: ‘‘தங்கள் இல்லங்களில் திமுகவினர் கட்சிக்கொடி ஏற்றிட வேண்டும்’’ - மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு கட்சியினர், தங்கள் இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணாவால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

பவளவிழாவையொட்டி கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். கழகக்கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் - அலுவலகங்கள் - வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x