Published : 09 Sep 2024 05:57 AM
Last Updated : 09 Sep 2024 05:57 AM
சென்னை: 'உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழகம் வந்து, தமிழகத்துக்கு முடிந்ததை செய்யுங்கள்' என்று சிகாகோவாழ் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம், சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற, அமெரிக்க வாழ் தமிழர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இனம், மொழி, நாடு, சாதி, மதம்,பால், வர்க்கம், நிறம் என்று எந்த பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்குமான பொதுமறையை தந்த வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஊரை தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்த புகழுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக, 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்றும், நகரநாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். அதனால்தான் இந்திய துணை கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறேன்.
இப்படிப்பட்ட பெருமைக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும், அன்புக்கும் சொந்தக்காரர்களான தமிழினம் இன்றைக்கு பல நாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளில் இருக்கிறது. அந்த உயர்பொறுப்புகளுக்கு கடைக்கோடியில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களும் வரமுடியும் என்பதை சாத்தியப்படுத்தியது, நம் தமிழகத்தில் உள்ள சமூக நீதியும், அதற்காக பாடுபட்ட தலைவர்களும்தான்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்த அடித்தளத்தில், உலகத்தை தமிழகம் நோக்கி ஈர்த்தோம். தமிழகத்தை உலகம் உள்வாங்கியது. அதற்கு சாட்சியங்களாகத்தான் நீங்கள் உள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு தமிழகத்தில் உள்ளது.
உக்ரைன் நாட்டுக்கு படிக்கச் சென்ற 1,524 மாணவர்கள், கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் இருந்து 83 தமிழர்கள், இஸ்ரேலில் கல்விக்காக சென்ற 126 பேர் என கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 2,398 பேரை அயல்நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து மீட்டுள்ளோம். தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், தாய்வீடாக தமிழகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த ஆட்சி ஏற்படுத்தி வருகிறது. இது அனைத்துக்கும் முத்தாய்ப்பான திட்டம்தான், அயலகத்தில் வாழும் நம்முடைய குழந்தைகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துவரும் ‘வேர்களைத் தேடி’ திட்டம்.
ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு குழந்தைகளோடு வாருங்கள். வள்ளுவரை காட்டுங்கள், கீழடி அருங்காட்சியகம், சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களால் முடிந்த செயல்களை தமிழ்நாட்டுக்கு செய்யுங்கள். உங்களுக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள். உங்கள் உயர்வுக்கு காரணமான அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கை பயணத்தை தொடருங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிகாகோ தமிழர்கள் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘இமை நேரத்தில் கண்டங்களை கடந்துவிட்ட உணர்வு. சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில் தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளை தாங்கி, அமெரிக்க மண்ணில்தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக, திமுக தலைவராக அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். புலம் பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளை சொல்லி, அமெரிக்க பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சில் ஏந்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT