Published : 09 Sep 2024 06:10 AM
Last Updated : 09 Sep 2024 06:10 AM

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை: சிகாகோவில் இருந்தபடி முதல்வர் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை உட்பட திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோவில் இருந்தபடியே காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று தற்போது ஆளுங்கட்சியாகவும் உள்ள திமுக, அடுத்த 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

எனவே, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, தற்போதே 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இக்குழு கட்சித் தலைமைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த குழுவினர், முதல் கட்டமாக அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிர்வாகரீதியாக கட்சியில் உள்ள பிரச்சினைகளை களையும் வகையில் நடவடிக்கை எடுப்பது, கட்சியினர் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது போன்றவற்றையும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சட்டப்பிரிவு, மாணவரணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளையும் சமீபத்தில் சந்தித்த இக்குழுவினர், பேரவை தேர்தலுக்கு விரைவாக தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சிகாகோவில் உள்ளார். அங்கு அவர் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களை சந்தித்து முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த சூழலில், நேற்று இரவு அவர் காணொலி வாயிலாக, கட்சி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ஒருங்கிணைப்பு குழுவினர் இதற்கு முன்னதாக பல்வேறு அணியினருடன் நடத்திய ஆலோசனையில் பெறப்பட்ட தகவல்கள், அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கைகள், கட்சியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

முன்னதாக, நேற்று முன்தினம், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த, குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தில் 54 சதவீதத்தினர் முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தியாக இருப்பதாகவும், 17 சதவீதத்தினர் ஓரளவு திருப்தி என்றும், 29 சதவீதத்தினர் அதிருப்தியாக உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிருப்தியும் கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதுள்ள அதிருப்திதானே தவிர முதல்வர் மீதுள்ள அதிருப்தி அல்ல. இதை தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு விரைவில் சரி செய்துவிடும். அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார். இந்த கருத்து கணிப்பு தொடர்பாகவும் குழுவினர் முதல்வருடன் விவாதித்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x