Published : 09 Sep 2024 04:43 AM
Last Updated : 09 Sep 2024 04:43 AM

சித்தர்கள் சொன்னதைதான் பேசினேன்: போலீஸ் விசாரணையில் மகாவிஷ்ணு வாக்குமூலம்

சென்னை: பள்ளி மாணவர்கள் மத்தியில்சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, தான் தவறு செய்யவில்லை என்றும் சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் போலீஸில் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 'பரம்பொருள்' அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த 28-ம் தேதி ‘தன்னம்பிக்கை ஊட்டும்’ பேச்சுஎன்ற பெயரில் சொற்பொழிவாற்றினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மகா விஷ்ணு மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை, மகாவிஷ்ணு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது மகா விஷ்ணு ஆஸ்திரேலியா சென்றிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தஅவரை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தமகாவிஷ்ணு, இளம்வயதிலேயே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். தொடக்கத்தில் கோயில் திருவிழாக்களில் சொற்பொழிவாற்றியவர், அதன்பிறகு ‘பரம்பொருள்’ என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி யூடியூப் மூலம் சொற்பொழிவாற்றி வந்தார். தற்போது, வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்.

அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உரையாற்றியதாகவும், தான் எந்த தவறும்செய்யவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அவர் அடிக்கடி தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், அப்போது சித்தர்கள் தன்னிடம் சொன்னதை பேசியதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், சிறைக்குச் சென்றால், அங்கு கைதிகளிடமும் இதைத்தான் பேசுவேன் என்றும் தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். இவ்வாறு போலீஸார் கூறினர்.

இந்நிலையில், திருவொற்றியூரில் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் அளித்த புகாரின்பேரிலும், காவல்ஆணையர் அலுவலகத்தில் மற்றொரு மாற்றுத் திறனாளி சங்கத்தினர் அளித்த புகாரின்பேரிலும் தொடர்ச்சியாக மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x