Published : 08 Sep 2024 12:24 PM
Last Updated : 08 Sep 2024 12:24 PM
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆகியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளபக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்டக் கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இந்தச் சூழலில் நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதிலும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: இதனிடையே விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிக்கு 21 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நடிகர் விஜய், கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து . விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகின்ற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த அனுமதி வேண்டி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.
அன்றே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு கடந்த 2-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு 5 நாட்களில் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷிடம் காவல்துறையால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை எழுத்துப்பூர்வமாக தவெக கட்சியினர் அளித்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) டி.எஸ்.பி சுரேஷ் 21 நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளார். அனுமதி கடிதத்தை கட்சியின் சார்பில் வழக்கறிஞர் அரவிந்த் பெற்றுக் கொண்டார். இதனை அறிந்த தவெக கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment