Published : 08 Sep 2024 12:18 PM
Last Updated : 08 Sep 2024 12:18 PM

மேலும் 14 மீனவர்கள் கைது | ‘‘கடிதம் எழுதினால் கடமை முடிந்து விடுமா?’’ - முதல்வருக்கு அன்புமணி கேள்வி

மீனவர்கள்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கின்றனர். வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

ஜூன் மாதம் 15-ஆம் தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த பிறகு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி 134 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 187 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

வங்கக்கடலில் காலம் காலமாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது என்பதால் தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரித்திருந்தால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், மத்திய அரசு அமைதியாக இருப்பதால் தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது போன்ற அடுத்தக்கட்ட அத்துமீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது. இதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.

மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்றாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காணச் செய்யும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், தயாராக எழுதி வைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கையை மட்டும் மாற்றி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்புவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இதை விட பொறுப்பற்ற செயல் இருக்க முடியாது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x