Published : 07 Sep 2024 07:20 PM
Last Updated : 07 Sep 2024 07:20 PM
திருச்சி: “சென்னையில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல சனாதன சொற்பொழிவு. அவர் இந்து மத பெயரை கூறி பிழைப்பு நடத்துபவர். இந்த விஷயத்தில் மகாவிஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று (செப்.7) பேசுகையில், “திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு போதிய ஓடுதளம் இருந்தால் தான் விமானங்கள் வந்து செல்ல முடியும். எனவே ஓடுதள விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்துள்ளேன். விமான நிலையத்தில் இஸ்லாமியருக்கு தொழுகைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இ-வாகனம் சேவை கொண்டு வர வேண்டும். கார்கோ விமானம் இயக்க பரிசீலனை செய்ய வேண்டும். விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்ய அதிகாரிகள் குறைவு, பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளதால் அதிகாரிகள் மேலும் நியமிக்க பரிந்துரை செய்துள்ளேன். திருச்சி விமான நிலைய விரிவாக்கம் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. மிதமுள்ள 5 சதவீத பணிகளை துரிதப்படும் வகையில் பேசி வருகிறோம். திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருத்தில் பெயர் பலகை இருந்தது தேவையில்லாத ஒன்றாகும். இதை படித்தால் பயணிகளுக்கு ஏதும் தெரியாது.
தற்சமயம் மூன்று பேருந்துகள் விமான பயணிகளை ஏற்றி, இறக்கிவிட ஏற்பாடு செய்யப்படுள்ளது விமான நிலையத்தில் நிரந்தர பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வக்பு போர்டு சட்ட திருத்தம் தேவையில்லை.
சென்னையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல சனாதன சொற்பொழிவு. இவர் இந்து மத பெயரை கூறி பிழைப்பு நடத்தும் அற்பன். இந்த விஷயத்தில் மகாவிஷ்ணுவை அழைத்து வந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. படிப்படியாக மதுக்கடையை அரசு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொடர்வோம். மதவாத சக்தி வேரூன்ற கூடாது என்பது எங்களது நோக்கம். 2026-ம் ஆண்டு தொடர வேண்டும் என்று தான் நினைக்கிறோம்.” என்று துரை வைகோ கூறினார்.
இந்த பேட்டியின் போது மாநில துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்ட தலைவர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ் மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் எல்லக்குடி அன்புராஜ், துரை வடிவேல், பகுதி செயலாளர்கள் ஆசிரியர் முருகன் , முருகன், ஆடிட்டர் வினோத், கோபால கிருஷ்ணன், வட்டச் செயலாளர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT