Published : 07 Sep 2024 06:59 PM
Last Updated : 07 Sep 2024 06:59 PM

விநாயகர் சதுர்த்தி: உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்: வெளிநாட்டு பக்தர்கள் தரிசனம்

திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டை, மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ கொழுக்கட்டை என மொத்தம் 150 கிலோ கொழுக்கட்டை படையலிடப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி மலைக்கோட்டையின் நடுவே தென் கயிலாயம் என்று போற்றப்படும் தாயுமான சுவாமி கோயிலும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளன.

இந்தக் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.7) தொடங்கி செப்.20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காலை 7 மணியளவில் மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமிக்கு கஜபூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜையும், சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் பிரம்மாண்ட கொழுக்கட்டையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. இந்த விழாவிற்காக கோயில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 24 மணி நேரத்திற்கு முன்பு சுடுநீர் ஆவியில் வேகவைத்து 150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது.

பிறகு இந்த கொழுக்கட்டையை இன்று காலை கோயில் பணியாளர்கள் ஒரு துணியில் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். இதில் உச்சிப்பிள்ளையாருக்கும், பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ அளவிலான கொழுக்கட்டையை படையலிட்டனர்.

பிறகு மாணிக்க விநாயகருக்கு உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவு கலந்து கொண்டனர். விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலை உச்சியில் உள்ள படிகளில் பல்வேறு வகையான வண்ணங்களில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. மாணிக்க விநாயகர் சன்னதியிலும், உச்சிப்பிள்ளையார் சன்னதியிலும் பழ வகைகள், மலர்களால் ஆன பந்தல் மற்றும் வாழை மரங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

விழாவில் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை கோயிலில் இன்று முதல் 14 நாட்கள் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் அனிதா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருச்சி மாநகரில் பாலக்கரை செல்வ விநாயகர் கோயில், ரெட்டை பிள்ளையார் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

1, 175 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் 1,175 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 2,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி,கொள்ளிடம் மற்றும் அந்தந்த ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x