Published : 07 Sep 2024 04:33 PM
Last Updated : 07 Sep 2024 04:33 PM
கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.பிரசித்தி பெற்ற புலியகுளம் அருள்மிகு ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் உள்ள சிலை கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆசியாவிலேயே, ஒரே கல்லால் 19 அடி 10 அங்குலம் உயரமும் 10 அடி10 அங்குலம் அகலமும் கொண்ட மிகப் பெரிய விநாயகர் சிலை என்ற பெருமையை கொண்ட புலியகுளம் அருள்மிகு ஸ்ரீ முந்தி விநாயகர் கோயில் சிலை பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க யாகவேள்வி தொடங்கி சிறப்பு மகா அபிசேகம் நடைபெற்றது. இதில் 16 வகையான பல்வேறு வாசனை திரவியங்களல் அபிசேகத்தை தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர்,மஞ்சள் ,சந்தனம், இளநீர் பன்னீர் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிசேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து முந்தி விநாயகருக்கு சுமார் 50 கிலோ எடையில் சந்தன காப்புடன் 2 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செயபட்டது. விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான கொழுக்கட்டை, அதிரசம் ,முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு பலகாரங்கள்லுடன் மகா தீபராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனமுருகி வேண்டி வணங்கினர்.
அதேபோல், பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிக பேரிகார்டுகள் அமைத்து வரிசையாக பக்தர்களை போலீஸார் அனுப்பினர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடத்தி சுவாமிக்கு வெள்ளி கிரீடமும் குங்கும அலங்காரமும் சாத்தப்பட்டது. அதே போல வெண்பட்டு உடுத்தப்பட்டது. மேலும், கோவையில் உள்ள பல்வேறு விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT