Published : 07 Sep 2024 11:50 AM
Last Updated : 07 Sep 2024 11:50 AM

தூத்துக்குடி தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப்.9-ம் தேதியன்று நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப்.7) விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப்.9-ம் தேதியன்று நடத்த உள்ள மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.

தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையாக இருந்தாலும்; மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் மத்திய அரசும், மாநில அரசும் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் இருந்து பருவலை மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களுடைய விசைப் படகுகளையும் கடந்த ஆக.5-ம் தேதியன்று, எல்லை தாண்டியதாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத மாநில அரசுக்கும், மீனவர்கள் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் உரிய தீர்வு காணப்படவில்லை.கடந்த 3.9.2024 அன்று இலங்கை நீதிமன்றம் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளதோடு, எஞ்சியுள்ள 10 மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்கான தீர்ப்பு செப்.10-ல் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க மத்திய அரசையும், திமுக அரசையும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப் படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப்.9 அன்று நடத்த இருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ஊ. ராஜூ, சண்முகநாதன்,செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x