Published : 07 Sep 2024 11:58 AM
Last Updated : 07 Sep 2024 11:58 AM
சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவுக்கு அனுமதித்த தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ததை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியின்றியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்துக்கு தெரியாமலும் நடைபெற்றதா? எனில் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் நடைபெற்றது என்றால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
அனைத்தையும் அனுமதித்து விட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள கடைநிலை அரசு ஊழியர்களை பலியாக்குகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் பலியாக்கப்பட்டனர். தற்போது பள்ளி தலைமையாசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தவறுக்கான முழுப்பொறுப்பை ஏற்று, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து செயல்படுவதுதான் ஒரு நல்ல அரசின் நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும். எனவே, சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியரின் இடமாற்ற தண்டனையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் நிகழாமல் கவனமுடன் செயல்பட வேண்டும்.” இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT