Published : 07 Sep 2024 05:07 AM
Last Updated : 07 Sep 2024 05:07 AM
சென்னை: தும்பிக்கை நாயகனின் அருளால், இல்லந்தோறும் இன்பம் பெருகட்டும் என விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: விநாயகரை வணங்கி, எதைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும் என்பது நமது நம்பிக்கை. இந்நன்னாளில் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, அமைதி, ஆரோக்கியம் நிலைத்திடவும், நாட்டின் நலமும் வளமும் பெருகி, ஒற்றுமை ஓங்கிடவும் கடவுளிடம் வேண்டுகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கை. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய்நொடி இல்லா பெருவாழ்வு வாழ, வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விநாயகர் சதுர்த்தி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த விநாயகர் சதுர்த்திநல்வாழ்த்துகள். வினை தீர்க்கும் விநாயகர் அருளால் அனைவருக்கும் வெற்றி கிட்டட்டும். இல்லந்தோறும் இன்பமும், வளமும் பெருகட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மகிழ்ச்சியான இந்நாளில் அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் இன்னல்கள் விலகி, வளங்கள் பெருகி, மகிழ்ச்சி நிறைய இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: எதிர்மறை எண்ணங்கள் ஒழிந்து, நேர்மறை எண்ணங்கள் வளர முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடுவோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: விநாயகரின் அருளால் பொதுமக்கள் அனைவரின் வாழ்வில் அன்பும், அமைதியும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்.
வி.கே.சசிகலா: ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.தும்பிக்கை நாயகனின்அருளால், வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும்.
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும், கல்வி, விவசாயம் செழித்திடவும் விநாயகப் பெருமானை பிரார்த்திக்கிறேன்.
கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ்: சாதி மத பேதமின்றி மனிதநேய பண்புடன் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ விநாயகர் சதுர்த்தி தினத்தில் இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT