Published : 23 Jun 2018 08:37 AM
Last Updated : 23 Jun 2018 08:37 AM

‘எய்ம்ஸ்’ வருவதால் திடீர் மவுசு; இணையத்தில் பிரபலமாகும் மதுரை ‘தோப்பூர்’

மதுரை மாவட்டம், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ அமைவதால் கூகுள் முதல் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தோப்பூர் அதிகம் தேடப்படுவதோடு அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகவும் மாறியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை கூகுளில் ஆங்கிலத்தில் Thoppur என்று (தோப்பூர்) டைப் செய்து தேடினால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரைக் காட்டியது. இது தருமபுரி - சேலம் மாவட்ட எல்லையில் உள்ளது. இந்த இரு மாவட்டங்களுக்கு இடையில் அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் மலையை குடைந்து செல்லும் கன்னியாகுமரி - பெங்களூரு நான்குவழிச் சாலையில் தொப்பூர் அமைந்துள்ளது. இதை தொப்பூர் கண வாய் என்றும் கூறுவர்.

இங்குள்ள சவாலான வளைவுப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். அதனால், இந்த ஊரைப் பற்றி அடிக்கடி பத்திரிகைகள், வார இதழ்களில் செய்திகள் அடிபடும். சமூக வலைதளங்களிலும் அதிகம் தேடப்படும், விவாதிக்கப்படும் ஊராக தொப்பூர் இருந்து வந்தது.

தற்போது மதுரை மாவட்டம், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதனால், நாடு முழுவதும் உள்ள மக்கள், மதுரை மாவட்டம் தோப்பூரை அறியும் ஆவலில் அதன் அமைவிடத்தை தேடத் தொடங்கி உள்ளனர்.

தற்போது இணையத்தில் Thoppur என்று டைப் செய்தால், மதுரை மாவட்டம் தோப்பூரையே முதலில் காட்டுகிறது. இந் தத் தோப்பூர் கன்னியாகுமரி - பெங்களூரு நான்குவழிச் சாலை யில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், திருமங்கலத் தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த ஊரில் தான் மதுரை துணைக்கோள் நகரமும் அமைகிறது. தற்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையும் அமைவதால் மதுரையின் துணை நகரமாகிறது.

பொதுவாக கூகுள் போன்ற தேடுபொறிகளில் அதிகமானோர் எதை தேடுகிறார்களோ அதுவே முதலில் வரும். ஒரே வார்த்தை மற்றும் ஒரே பெயரில் பல ஊர் கள் அமைந்திருந்தாலும், அதில் மிகப் பிரபலமான, அதிகம் பேர் தேடக்கூடிய ஊரே முன்னிலைப்படுத்தப்படும்.

‘எய்ம்ஸ்’ அறிவிப்புக்குப் பிறகு, இணையங்களில் ‘தொப்பூரின்’ இடத்தை ‘தோப்பூர்’ பிடித்துவிட்டது. வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தோப்பூரை பற்றியே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x