Published : 07 Sep 2024 06:10 AM
Last Updated : 07 Sep 2024 06:10 AM

பகுத்தறிவுக்கு விரோதமாக பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரை கைது செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளியில் பகுத்தறிவுக்கு விரோதமாகப் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளரைக் கைது செய்யவேண்டும் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: சென்னை அசோக் நகர் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் இத்தகைய நச்சு கருத்துகளால், மிகப்பெரிய பேராபத்தை தமிழகம் எதிர்நோக்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சென்னை அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சாளர், மாணவிகளிடையே மூட நம்பிக்கையை விதைத்துள்ளார். இத்தகைய நிகழ்ச்சிகள் இனி நடப்பதை அனுமதிக்கக்கூடாது. இந்நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: அரசுபள்ளிகள் மூட நம்பிக்கை கருத்துகளுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் பயிற்சி களமாகவும் பயன்படுத்துவதை பள்ளிக் கல்வித்துறை தடுக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மிகவும் ஆபத்தானது. இந்நிகழ்ச்சியை முன்னெடுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், தலைமையாசிரியரையும் உடனடி யாக பணிநீக்கம் செய்வதுடன், பேச்சாளர் மகாவிஷ்ணுவையும் கைது செய்ய வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது.

திக தலைவர் கி.வீரமணி: சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் பேச்சாளர் பேசியிருப்பது மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்கத்தக்கது. அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

சட்டப்பேரவை விசிக குழு தலைவர் சிந்தனை செல்வன்: சென்னை அரசு பள்ளியில் அரங்கேற்றப்பட்ட சனாதன உரையாடல் பேரதிர்ச்சியை தருகிறது. சனாதன சக்திகள் புதிய முகமூடிகளுடன் புறப்பட்டிருப்பது குறித்து தீவிரமாய் விவாதிக்க வேண்டும்.

புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி: பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் பேச்சாளர் பேசிய பேச்சு ஆன்மிக நெறி என்று சொல்வதற்கே தகுதியற்றது. பள்ளி கல்லூரிகளில் மூடநம்பிக்கைக்கு எதிரான போதனைகள் போதிக்கப்பட வேண்டும் என்றால் நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்.

எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி: சமூகநீதி மாநிலமான தமிழகத்தில் அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுப்படுத்தி பேசிய மகாவிஷ்ணு மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

குறளை போதித்தது குற்றமா? - இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அசோக் நகர் பள்ளியில் சொற்பொழிவில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஏதோ குற்றத்தில் ஈடுபட்டது போல,அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தபள்ளியின் தலைமை ஆசிரியரும்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தமிழுடைய, தமிழனுடைய பெருமையாக திருக்குறளை நாம் காட்டி வருகிற நிலையில், தமிழகத்தில் தமிழ் குழந்தைகளிடையே திருக்குறள் போதிப்பது, மிகப்பெரிய குற்றம் என்கிற ஒரு நிலையை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி இருப்பது வேதனையைத் தருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x