Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM

பெண்களிடம் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்: ரோந்து பணிக்கு கூடுதல் வாகனம்- எஸ்பி அறிவிப்பு

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வரும் மர்மநபர்கள், கழுத்தில் இருக்கும் தாலி செயினை பறித்துச் செல்லும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதைத் தடுக்க, நகரப் பகுதியில் கூடுதல் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாரின் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ரங்கராஜன் தெருவில் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 சரவன் தாலி செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனர்.மாமல்லன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி. அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவர், வியாழக்கிழமை பள்ளிக்கு செல்வதற்காக மாமல்லன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, மாலதி தாலுகா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரண்டு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த வழிப்பறி சம்பவங்களால், பெண்கள் சாலையில் நடமாட அச்சமடைந்துள்ளனர். அதனால், போலீஸாரின் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நகரவாசிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது, “ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார் இரவு மற்றும் பகல் என `ஷிப்ட்’ முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நேர ரோந்து பணிகள் முடிந்த போலீஸார் பணி மாற்றுவதற்காக செல்லும் நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறும் நிலை உள்ளது. போலீஸாரின் கண்காணிப்பு உள்ளதா என குற்றவாளிகள் கண்காணித்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. எனினும், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைவில் பிடிப்போம்” என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜயக்குமார் கூறும்போது, “நகரப் பகுதியில் நடைபெற்றுள்ள வழிப்பறி சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மர்ம நபர்கள் சாலையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து இத்தகைய வழிப்பறி சம்பவங்களை நடத்துகின்றனர். அதனால், அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நகரப் பகுதியின் வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்காக இரண்டு ரோந்து வாகனங்களில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த வழிப்பறி சம்பவத்தினால், போலீஸாரின் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக ஒரு ரோந்து வாகனத்தை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x