Published : 06 Sep 2024 08:04 PM
Last Updated : 06 Sep 2024 08:04 PM
சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கப்படும் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.47 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே மெரினாவில் கடை நடத்தி வரும் உரிமம் பெற்றுள்ள வியாபாரிகளுக்கு 900 தள்ளுவண்டி கடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 900 தள்ளுவண்டி கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடைகளை ஒதுக்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கடைகளில் எத்தனை சதவீத கடைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பி, இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் இருவாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதேபோல், மெரினா லூப் சாலையின் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “லூப் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை கடந்த ஆக.12-ம் தேதி திறக்கப்பட்டு சிலருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்பகுதி கோயில் திருவிழா காரணமாக மற்ற கடைகளுக்கான ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளும் முறையாக ஒதுக்கப்படும். இதுதொடர்பான முழுமையான பட்டியலை தாக்கல் செய்ய இருவாரகால அவகாசம் வழங்க வேண்டும், எனக் கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையையும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT