Published : 06 Sep 2024 07:41 PM
Last Updated : 06 Sep 2024 07:41 PM
மதுரை: “தடைகளைத் தாண்டி வருவதுதான் அரசியல் என்பது விஜய்க்கு தெரியும்” என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அயன்பாப்பாகுடியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் மின்விசிறிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று உதவிகள் வழங்கினார். பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.
பின்னர் அவர் மாணவர்களுடன் பேசும்போது, “நான் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது புதிதாக துவங்கிய பள்ளி என்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆறாம் வகுப்புக்கு செல்லும்போது அங்கே மின்விசிறிகள், கணினிகள் வசதிகள் இருந்தது. அதில் விஜயகாந்த் என்னும் பெயர் இருந்தது. அதை பார்க்கும்போது பெருமையாக இருந்தது. மற்ற பள்ளிகளின் முகாமுக்கு செல்லும்போது அங்குள்ள பொருள்களில் விஜயகாந்த் என்னும் பெயர் இருந்தது.
படிப்பில், விளையாட்டு போட்டியில் முதலிடம், இரண்டாமிடம் பெறுவோருக்கு பரிசுகள் வழங்குவது உங்களை ஊக்குவிக்க தானே தவிர ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க இல்லை. உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் ஒரு அண்ணனாக இருந்து நிச்சயம் உதவி செய்வேன்” என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணன் விஜய் மிகப் பெரிய சினிமா நட்சத்திரம். என்பதில் சந்தேகமில்லை. அரசியல் என்று பார்க்கும்போது தேமுதிக 20 ஆண்டு கட்சி. விஜய்யின் அரசியல் கொள்கை, மக்கள் வரவேற்பை வைத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கையை சொல்ல முடியும். அவர் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே ஆரம்பித்துள்ளார். அவர் கட்சிப்பணியை தொடங்கியபின் தான் எந்தக் கூட்டணிக்கு செல்கிறார் எனத் தெரியும்.
மூன்று மாதத்துக்கு முன்பு திட்டமிட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளதால் இன்னும் விஜய்யின் ‘கோட்’ படத்தை பார்க்க இயலவில்லை. ஆனால் அப்படத்தில் எனது தந்தை விஜயகாந்த் வரும் காட்சிகளை தியேட்டரில் பார்த்த மக்கள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு அனுப்பியதை பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது. விரைவில் படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன். பல தடைகள், அவமானங்களை கடந்து விஜயகாந்த்தின் ஆளுமையால் தான் தேமுதிக கொடி பறக்கிறது. இதையெல்லாம் தாண்டி வருவதுதான் அரசியல் என்பது விஜய் அண்ணனுக்கும் தெரியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment