Published : 06 Sep 2024 06:01 PM
Last Updated : 06 Sep 2024 06:01 PM
விழுப்புரம்: “விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தவெக மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் கடிதம் கொடுத்திருந்தோம். அந்தக் கடிதத்தின் அடிப்படையில், காவல் துறையினர் 21 கேள்விகளை எழுப்பியிருந்தனர். அந்த 21 கேள்விகளுக்கான பதில்களை நாங்கள் இன்று கொடுத்திருக்கிறோம்.
மேலும், மாநாட்டுக்கான அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையினர் ஓரிரு நாட்களில் உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துவிட்டு அறிவிப்பதாக கூறியுள்ளனர். அதன்பிறகு, மாநாடு நடைபெறும் தேதியை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்,” என்றார்.
விக்கிரவாண்டியில் தான் மாநாடு நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, “விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு காவல் துறையிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். காவல் துறை எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதில் அளித்திருக்கிறோம். காவல் துறை அனுமதி குறித்து அறிவித்த பிறகு, கட்சியின் தலைவர் விஜய் மாநாடு நடைபெறும் தேதியை அதிகார்பூர்வமாக அறிவிப்பார்,” என்றார்.
காவல் துறை காலதாமதம் ஏற்படுத்துவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “ஏற்கெனவே கொடுத்த கடிதத்துக்கு 5 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று காவல் துறை கூறியிருந்தது. அதனடிப்படையில் நாங்கள் பதில் அளித்துள்ளோம். காவல் துறை எழுப்பிய கேள்விகள் குறித்த கடிதத்தை திங்கள்கிழமையன்று நாங்கள் பெற்றோம். 5-வது நாளான இன்று பதில் கடிதம் கொடுத்துள்ளோம். எனவே, அவர்கள் மேலதிகாரிகளிடம் கலந்துபேசி நல்ல பதிலை தருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...