Published : 06 Sep 2024 05:54 PM
Last Updated : 06 Sep 2024 05:54 PM

வட சென்னையில் மாசுபடும் நீர்வழித்தடங்கள்! - விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிடும் குடிநீர் வாரியம்

கொருக்குப்பேட்டையில் பக்கிங்ஹாம் கால்வாயில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுகிறது. | படங்கள்: ச.கார்த்திகேயன் |

சென்னையில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் லாரிகள் மூலமாக விதிகளை மீறி கழிவுநீரை விடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகரப்பகுதி கழிவுநீர் மேலாண்மை விதிகள்-2022, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2022 ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.

இதன் கீழ் விதிகளை மீறும் லாரிகள் மீது அபராதம் விதிப்பது, பெர்மிட்டை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் எடுத்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் கட்டமைப்பில் 4 ஆயிரத்து 659 கி.மீ. நீள கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலமாக 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அவ்வாறு நாளொன்றுக்கு 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளொன்றுக்கு 1,054 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது லாரி குடிநீர், சொந்த ஆழ்துளை கிணறுகள், கேன் குடிநீர் போன்ற ஆதாரங்கள் மூலமும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நாளொன்றுக்கு தோராயமாக 1,200 மில்லியன் லிட்டருக்கு மேல் குடிநீர் பயன் படுத்தப்படுகிறது. அதில் சுமார் 1,000 மில்லியன் லிட்டர் கழிவுநீராக வெளியேற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் சென்னை குடிநீர் வாரியத்திடம் அவ்வளவு கழிவுநீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பு இல்லை. அதனால் மிகுதியாக வெளியேறும் கழிவுநீரை வாரியமே மாநகரில் உள்ள நீர்வழித்தடங்களில் விட்டு மாசுபடுத்துவதாகவும், குறிப்பாக வட சென்னை பகுதியில் ஓட்டேரி நல்லா மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் தொடர்ந்து கழிவு நீரை விட்டு மாசுபடுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புளியந்தோப்பு பகுதி,ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் வடிகால்
வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் விடப்படுகிறது.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொருக்குப்பேட்டை வழியாக செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் சென்னை குடிநீர் வாரியம் விதிகளை மீறி சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விட்டு மாசுபடுத்தி வருகிறது. தற்போது திரு.வி.க.நகர் மண்டலத்திலும் புளியந்தோப்பு பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயிலும், விதிகளை மீறி சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீரை விட்டு வருகிறது. இதுவும் பேசின் பாலம் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.

இது, வட சென்னை பகுதி முதல் நேப்பியர் பாலம் வரை கொசு உற்பத்திக்கும், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும் காரணமாக உள்ளது. அண்மையில் விதிகளை மீறி பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் திறந்துவிட்ட 5 லாரிகளின் பெர்மிட் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக ரத்து செய்யப்பட்டது. இங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய குடிநீர் வாரியமே விதிகளை மீறி வருகிறது. இவ்வாரியம் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக சென்னை குடிநீர்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சில நேரங்களில் பராமரிப்பு பணிகளின்போது கழிவுநீர் சேவை நிறுத்தப்படும். அப்போது அவசர காரணங்களுக்காக கழிவுநீரை வெளியேற்றி இருக்கலாம். தொடர்புடைய பகுதிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x