Last Updated : 06 Sep, 2024 04:57 PM

 

Published : 06 Sep 2024 04:57 PM
Last Updated : 06 Sep 2024 04:57 PM

வன விலங்குகளால் பாதிப்புகள்: தென்காசி குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

பாட்டாகுறிச்சி பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகில் கல் குவாரிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு நூதன முறையில் முறையிட்டார்.

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் கூறும்போது, "தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள வடகரை, மேக்கரை, அச்சன்புதூர், கடையநல்லூர், செங்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வடகரை, அச்சன்புதூர் பகுதிகளில் 12-க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் காட்டெருமைகள், சிறுத்தை, காட்டுப் பன்றிகள் திரிவதால் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

வனத்துறையினர் எவ்வளவு முயன்றும் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் விவசாய தொடர்ந்து நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. பகல் நேரங்களிலும் அச்சத்துடன் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை நிரந்தரமான வனப் பகுதிக்குள் விரட்டி, அகழிகள், வேலிகள் அமைக்க வேண்டும். மாவட்ட வன அலுவலரை நியமிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலகங்களில் வனத்துறை சார்பில் பதிவேடு வைத்து, வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறைதீர்க் கூட்டத்தில் அணைகள், குளங்களில் நீர் இருப்பு, விதைகள், உரங்கள் இருப்பு குறித்து தெரிவிப்பது போல் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் குறித்தும் தெரிவித்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகரையில் இருந்து அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலையையொட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இரவு நேரத்தில் விவசாயிகள் காவலுக்கு செல்கின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையில் மின் விளக்குகள் வசதி இல்லை. எனவே, மின் விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விவசாயிகள் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x