Published : 06 Sep 2024 04:54 PM
Last Updated : 06 Sep 2024 04:54 PM

“பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள் சொல்லித் தர வேண்டும்” - எச்.ராஜா கருத்து

படம்: ர.செல்வமுத்துகுமார்.

திருச்சி: தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் தரம் குறைவு என ஆளுநர் கூறியது சரிதான் என்றும் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருக்கிறது என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா திருச்சி மாவட்டம் திருச்செந்துறை சந்திரசேகரர் சாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "தமிழகத்தில் பல்வேறு நிலங்களை எந்த ஆதாரமும் இல்லாமல் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்கின்றனர். நாடு முழுவதும் இதில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. 1995-ல் வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமாக 4 லட்சம் ஏக்கர் இருந்த நிலையில், இன்று 9.40 லட்சம் ஏக்கர் இருக்கிறது. பாதுகாப்பு, ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக 3-வது பெரிய நில உரிமையாளர் வக்ஃபு வாரியம்தான்.

வக்ஃபு வாரியத்துக்குள் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினரும் இருக்கலாம் என்று கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் அரசுதான் சட்டம் கொண்டு வந்தது. வக்ஃபு வாரியத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜெகாதம்பிகை பால் கமிட்டிக்கு மனு அளிக்க வேண்டும். இந்த இடங்கள் பத்திரம் பதிவு செய்ய முடியாது என சொல்ல முடியாது. வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்ற, திமுகவையோ, உதயநிதியையோ, அவரது மகனையோ அனுமதி கேட்க வேண்டுமா? தேசிய ஜனநாயக கூட்டணி ராஜ்யசபாவிலும் பலமாக இருக்கிறது. வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் நிறைவேறும்.

இந்துக் கோயில் சொத்துகள் கோயிலுக்கானதாக இருந்தால் அதை குடியிருப்பவர்கள் அங்கீகரித்து, அதற்குரிய வாடகையை கோயிலுக்கு செலுத்த வேண்டும். அறநிலையத் துறையில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவதால் என் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் 27 வழக்குகள் தொடுத்துள்ளனர்.

அமைச்சர் நேரு கூட்டணி குறித்து பேசியதை முதல்வர் ஸ்டாலின்தான் கேட்க வேண்டும். நேரு என்னுடைய நல்ல நண்பர். அவர் ஒரு கருத்து சொல்லியிருக்கிறர் என்றால், திமுக கூட்டணியில் ஒரு கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் தலித் ஒருவர் முதல்வராக வரமுடியாது என திருமாவளவன் சொன்னதை எண்ணிச் சொல்லியிருக்கலாம். இதனால் திமுக கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருப்பது மட்டும் தெரிகிறது. திமுக கூட்டணி குழப்பத்தில், பாஜகவுக்கு ஒருபோதும் பயனில்லை. பாஜக எப்போதும், பாஜகவை நம்பியே இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை ரத்து செய்தனர். ஆன்மிகம், நீதி போதனைகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். பெரியார், கருணாநிதி பற்றி பாடம் எடுத்தால் என்னாகும்?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் கல்வித் தரம் குறைந்துள்ளது என்று ஆளுநர் கூறிய கருத்து மிகச் சரியானது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ரூ.573 கோடி தரவில்லை என்று பேசுகின்றனர். இத்திட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துவிட்டு, தற்போது பின் வாங்குகிறார்கள். இது எங்களது தவறில்லை. கடந்த, 35 ஆண்டுகளாக பாஜக நிர்வாக குழுவில் பணியாற்றி வருகிறேன். நான் ஒருபோதும் கூட்டணி பற்றி பேசியதில்லை. பேசமாட்டேன்" என்று அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், முன்னால் தலைவர் ராஜேஷ், ஊடக பிரிவு துணைத் தலைவர் சிவகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x