Last Updated : 06 Sep, 2024 03:43 PM

1  

Published : 06 Sep 2024 03:43 PM
Last Updated : 06 Sep 2024 03:43 PM

ஜிபிஎஸ் காட்டிலும் துல்லியமான ‘நாவிக்’ வழிகாட்டி: இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் தகவல்

கோப்புப் படம்

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் ‘நாவிக்’ வழிகாட்டி பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஜிபிஎஸ் கருவியைக் காட்டிலும், நாவிக் வழிகாட்டி மிக துல்லியமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் பிரகாஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு நிறுவனம் சார்பில் புவி தகவலியல் பொறியாளர் அமைப்பு திறப்பு விழா, தேசிய தொலையுணர்வு நாள் மற்றும் தேசிய விண்வெளி தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் இன்று நடைபெற்றது. அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ.பிரகாஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் பிரகாஷ் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் என்பது மிகவும் முக்கியம். விண்வெளி திட்டங்களை நாம் முன்னெடுப்பது நம்மிடம் பலம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அல்ல; வளத்தை மேம்படுத்துவதற்காக. 2040-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்துக்கு குறைந்தபட்சம் 10 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு ஜிபிஎஸ், ‘கூகுள்மேப்’ போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். இதற்கு செயற்கைக் கோள்களின் பங்கு அளப்பறியது. ஜிபிஎஸ் கருவியை போலவே, இந்தியா சொந்தமாக 7 செயற்கைக்கோளுடன் இணைந்த ‘நாவிக்’ என்கிற வழிகாட்டியை உருவாக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் இந்த நாவிக் சிக்னலை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் சிக்னலை காட்டிலும் நாவிக் சிக்னல் மிக துல்லியமாகவும் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

ஏன் நிலவை தொடர்ந்து நாம் ஆராய்ச்சி செய்கிறோம் என்று பலரும் கேட்கின்றனர். இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி. இந்த நூற்றாண்டு நிறைவடைவதற்குள் மக்கள் தொகை இன்னும் பல மடங்கு மேலும் உயரும். அப்போது நமக்கு இந்த ஒரு பூமி போதாது. அதைவிட கூடுதலாக 1.5 பூமி தேவைப்படும். அதற்கேற்ப நிலவும் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் தான் அமைந்துள்ளது. இது அதிக தூரமில்லை. ஒரு சக்திவாய்ந்த ராக்கெட், 3 முதல் 5 நாட்களுக்குள் நம்மை நிலவுக்கு கொண்டு சேர்த்துவிடும்.

மேலும், நிலவில் ஏராளமான வளங்கள் மனித இனத்துக்கு பயன்படும் வகையில் உள்ளன. அவற்றை ஆராய்ச்சி செய்யவே சந்திரயான் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்மூலம் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. சந்திரயான்-1 வெற்றிக்கு பிறகு, சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது. ஆனால், அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். தோல்விகள் தான் அதிகளவில் நமக்கு கற்றுக்கொடுக்கும். அதிலிருந்து மீண்டுவர வேண்டும். தோல்விகளை பற்றி கவலைப்படக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அண்ணா பல்கலை. கட்டிட பொறியியல் துறை தலைவர் கே.பி.ஜெயா, தொலையுணர்வு நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.வித்யா, புவிசார் தகவல் பொறியாளர்கள் சமூகத்தின் தலைவர் சி.உதயகுமார், பேராசிரியர் திவ்யபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x