Published : 06 Sep 2024 03:17 PM
Last Updated : 06 Sep 2024 03:17 PM
சென்னை: நீலாங்கரையில் நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, காவல் ஆய்வாளர் தொடர்புடையை 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூரில் கார்த்திக் என்பவர் தனக்குச் சொந்தமான 18.25 சென்ட் நிலத்தை கோபாலகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளார் என்றும், இதை தடுக்க முயன்ற போது ரவுடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும், எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், நிலத்தை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
அந்தவகையில், நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஆனந்தபாபு தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று (செப்.6) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள ஆனந்தபாபு வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து சாஸ்திரி நகரில் வசித்து வரும் ஹரிணி என்பவரது வீட்டிலும், பெசன்ட்நகர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையின் போது, காவல் ஆய்வாளரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT