Published : 06 Sep 2024 01:42 PM
Last Updated : 06 Sep 2024 01:42 PM

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை; எல்லாம் மாயைதானா?- அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு குவிவதாக தமிழக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கூற்றுகள் அனைத்தும் மாயையாகவே தோன்றுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில் இத்தகைய தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு ஒரே ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யாததால் , அத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொண்ட 17 மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. தமிழகத்தின் இந்த நிலை அதிர்ச்சியளிக்கிறது.

தொழில்களைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் என்று கூறப்படும் கேரளம் சில ஆண்டுகளுக்கு முன் 28-ஆம் இடத்தில் இருந்தது. அதிலிருந்து முதலில் 15-ஆம் இடத்திற்கு வந்த கேரளம் இப்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்த 3 இடங்களை கைப்பற்றியுள்ளன. கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் இடம் கிடைக்காதது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொழில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அடிக்கடி பெருமைப்பட்டு கொள்கிறது. ஆனால், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்களாகவே உள்ளன; முதலீடுகள் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள், அதைக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. வெள்ளை அறிக்கை வெளியிடும் மரபு இல்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டுமானால் பலரை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயங்கள் இருப்பதாகவும், தொழில்தொடங்க எவரும் முன்வர மறுப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனம் நடத்துபவர்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் மிரட்டும் காணொலிகள் வைரலாகி வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் முதலீடு குவிவதாக தமிழக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கூற்றுகள் அனைத்தும் மாயையாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பது குறித்து விரிவான விளக்கங்களுடன் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x