Published : 06 Sep 2024 01:30 PM
Last Updated : 06 Sep 2024 01:30 PM
கும்பகோணம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்காவிட்டால் விநாயகர் ஊர்வலம் ஒத்திவைக்கப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி, பாஜக வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், அகில பாரத இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவர் ராம.நிரஞ்சன், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் வேதா.செல்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: “நாளை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கும்பகோணம் மாநகரில் 45 விநாயகர் சிலைகளுக்கு மேல் வைக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டு சிலைகளை வைத்த இடங்களிலும் இந்த ஆண்டு சிலைகளை வைக்க பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முடக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களிலும் புதியதாக இந்த ஆண்டு கூடுதல் இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைக்க விதித்துள்ள விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனுமதி வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்து அமைப்புகளைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், காவல் துறையும் வருவாய்த் துறையும் கூடுதல் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழகாவிட்டால் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் விநாயகர் ஊர்வலம் ஒத்திவைக்கப்படும்.
அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் அனுமதி அளித்த பிறகு, மற்றொரு நாளில் ஊர்வலம் வழக்கம் போல் நடைபெறும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை விநாயகர் சிலையிடம் அளித்து, விநாயகர் ஊர்வலத்தை முடக்க நினைக்கும் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT