Published : 06 Sep 2024 01:17 PM
Last Updated : 06 Sep 2024 01:17 PM
மதுரை: முகநூலில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவரின் முன்ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாரதிய பிரஜா ஜக்கிய கட்சியின் மாநிலச் செயலாளர் வேல்முருகன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், ‘கல்யாணசுந்தரம் என்ற பெயரில் முகநூலில் மகாத்மா காந்தியைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டும், காந்தியின் புகைப் படத்தை தவறாக சித்தரிக்கப் பட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கல்யாணசுந்தரம், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது, "கல்யாணசுந்தரத்துக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வேல் முருகன் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “கல்யாணசுந்தரத்தின் மீதான வழக்கின் விசாரணை தொடக்கக் கட்டத்தில் உள்ளது. போலீஸாரின் விசாரணைக்கு அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது” என கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
விசாரணை முடிவில், “மனுதாரர் மீதான குற்றத்தின் தீவிரத் தன்மை, விசாரணை நிலுவையில் இருப்பது, மனுதாரருக்கு எதிரான கடும் ஆட்சேபனைகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு முன்ஜாமீன் அளிக்க முன்வரவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT