Published : 06 Sep 2024 01:08 PM
Last Updated : 06 Sep 2024 01:08 PM
சென்னை: மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்கும் வகையில் தகராறு செய்யும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் கார் கண்ணாடியை உடைத்ததாக 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில், தகராறு செய்யும் மாணவர்களை கண்டறிந்து பெற்றொரிடம் தெரிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், சாகசம் என்ற பெயரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடியும் ஆபத்தான பயணம் செய்கின்றனர். மேலும், பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ‘ரூட் தல’ என்ற பெயரில் வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இப்படிப்பட்ட மாணவர்கள் மீது அவ்வப்போது காவல் துறை கடுமையான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து அடிதடி, மோதல், தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை அண்ணா சாலையில் ஆனந்த் திரையரங்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நந்தனம் கல்லூரி மாணவர்கள், அவ்வழியாக வந்த மாநகர பேருந்தில் பயணித்த புதுக் கல்லூரி மாணவரை தாக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றதால், அந்த மாணவர்கள் பேருந்தை நோக்கி கற்களை வீசினர். இதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக அந்தக் காரின் உரிமையாளர் ராஜா, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நந்தனம் கல்லூரி மாணவர்கள் 4 பேரை நேற்று கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தகராறு செய்யும் மாணவர்களை கண்டறிந்து பெற்றோரிடம் அவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment