Published : 06 Sep 2024 12:19 PM
Last Updated : 06 Sep 2024 12:19 PM
சென்னை: விநாயகர் சதுர்த்தி நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’’ என்ற வாக்கிற்கு ஏற்ப, முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும். வினை தீர்க்கும் தெய்வமான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தியன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்கு பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் போன்ற பொருட்களைப் படைத்து; அறுகம்புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.
வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை, இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய்நொடி இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வழியில், உளமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT