Published : 06 Sep 2024 04:39 AM
Last Updated : 06 Sep 2024 04:39 AM

கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறக்கவில்லை; நுழைவு வாயிலில் லாரிகளில் விற்கப்படும் பூஜை பொருட்கள்: வியாபாரம் பாதிப்பதாக புகார்

சென்னை: கோயம்பேடு சந்தையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு சந்தை திறக்கப்படாத நிலையில், லாரிகளில் கொண்டுவரும் பூஜை பொருட்களை சந்தை நுழைவு வாயிலிலேயே வியாபாரிகள் விற்பதால், தங்கள் வியாபாரம் பாதிப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 941 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி நேரடியாக 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும், 10 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்கள் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த சந்தையில் பொங்கல், ஆயுதபூஜை பண்டிகை காலங்கள் போன்று, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டும் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். அதில் அந்தப் பண்டிகைக்கு தேவையான அனைத்து பூஜை பொருட்களும் ஒரே இடத்தில் மலிவுவிலையில் கிடைக்கும்.

ஆனால் கரோனா பரவலுக்கு பிறகு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தையை திறப்பதில்லை. இந்த ஆண்டும் சிறப்பு சந்தை திறக்கப்படாத நிலையில் பண்டிகைக் கால வியாபாரத்தை கருத்தில் கொண்டு வியாபாரிகள் பலர் வெளியூர்களில் இருந்து பல்வேறு பொருட்களை லாரிகளில் கொண்டுவந்து, பழச்சந்தை பகுதியில், 4-வது எண் நுழைவு வாயில் பகுதியில் நுழைந்து அவர்களே நேரடிவியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் சந்தையில் நிரந்தரமாக கடை வைத்து வியாபாரம் செய்வோரின் கடைகளில் வியாபாரம் மந்தமாக உள்ளது.

லாரிகளில் பொருட்களை கொண்டு வரும் வியாபாரிகள், சந்தையில் உள்ள கடைகளில்தான் பொருட்களை இறக்கிவிட்டு செல்ல வேண்டும். அவர்களே நேரடிவிற்பனையில் ஈடுபடுவது விதிமீறல்.இதை சந்தை நிர்வாகமும் சிசிடிவிகேமரா வழியே பார்த்துக் கொண்டு, நடவடிக்கை எடுக்காமல்இருப்பதாக நிரந்தர வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோயம்பேடுசந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, லாரிகளில் கொண்டுவந்து பூஜை பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x