Published : 06 Sep 2024 04:35 AM
Last Updated : 06 Sep 2024 04:35 AM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேர்மையின்றி செயல்பட்டால் கடும் நடவடிக்கை: போலீஸாருக்கு ஆணையர் அருண் எச்சரிக்கை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். மேலும், நேர்மையின்றி செயல்படும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவல் ஆணையராக நான்பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பில் கவனம் செலுத்தினேன். பலரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டனர். எனது நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாக கருதுகிறேன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலையும் விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் கைதாகி உள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்துக்கு வந்துள்ளது. வழக்கு விவரங்கள் குறித்த விரிவான தகவல் அடுத்த வாரம் வெளியிடப்படும்.

கஞ்சா, தடை செய்யப்பட்டுள்ள குட்கா போன்ற புகையிலை போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தற்போது கவனம் செலுத்தி உள்ளேன். இதற்காக சென்னை உளவுப் பிரிவில் காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் செயல்பாடு நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 2 மாதத்துக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சென்னையில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் மோதல், ரகளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற மாணவர்கள் பட்டியலை சேகரித்து, அவர்களது வீட்டுக்கு போலீஸார் சென்றுபெற்றோரை வைத்து கவுன்சலிங் அளிக்க உள்ளனர்.

சைபர் குற்ற சம்பவங்கள் போலீஸாருக்கு சவாலாக இருக்கிறது. மும்பை சிபிஐ அதிகாரி போன்றுமிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. ‘சைபர் கிரைம்‘போலீஸார் நடத்திய விசாரணையில், மோசடி கும்பல் மும்பையில்இருந்து செயல்படவில்லை என்பதும், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்இருந்து செயல்படுவதும் தெரியவந்துள்ளது.

சைபர் கிரைம் புகார் எண் 1930: மேலும், கம்போடியா நாட்டில்இருந்துதான் அதிக அளவில் ஆன்லைன் மற்றும் சைபர் மோசடிகள் நடப்பதை கண்டறிந்துள்ளோம். மோசடி கும்பலில் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

‘ஆன்லைன்’ மோசடியில் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்தை நாட வேண்டாம். உடனடியாக 1930 என்ற ‘சைபர் கிரைம்‘ பிரிவு எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்தால், இழந்த பணத்தை மீட்டு விட முடியும். இதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும்.

சிறார்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில், சென்னையில் இயங்கும் 67 போலீஸ் பாய்ஸ் கிளப்களுக்கு புத்துயிரூட்டும் பணிகளும் நடந்து வருகிறது. போலீஸார் நேர்மையாக பணியாற்ற வேண்டும். வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவர்களுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். நேர்மையின்றி செயல்படும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு எண்ணிக்கையின்படியே இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x