Published : 17 Jun 2018 09:55 AM
Last Updated : 17 Jun 2018 09:55 AM
தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள இடத்தை ஜூன் 14-ம் தேதிக்குள் அறிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிந்த நிலையில் தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பதால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தமிழகத்தைவிட்டு கைநழுவிப் போகிறதா? என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என 2015-2016-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக முதல்வராக இருந்த ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து அனுப்பினார். இந்த இடங்களை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
ஆனால், மருத்துவமனை தொடங்கும் இடம், மருத்துவமனை குறித்து மத்திய அரசு எந்தவொரு பதிலையும் இதுவரை சொல்லவில்லை. தற்போது ‘எய்ம்ஸ்’க்கான இடம் தேர்வு பட்டியலில் மதுரை, தஞ்சாவூர் மட்டுமே முன்னிலையில் இருப்பதாகவும், அதில் ஏதாவது ஒரு இடம் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு திட்டத்துக்கும், அதை பெறுவதிலும் மாநில மக்களிடையே இதுவரை எந்த போட்டியும், போராட்டங்களும் பெரியளவில் ஏற்படவில்லை. ஆனால், ‘எய்ம்ஸ்’க்காக மாநில மக்கள், மண்டல ரீதியாகப் பிரிந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்கள் பகுதிக்கே வேண்டும் என்பதால் தமிழக அரசும், மத்திய அரசும் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசும் தமிழக அரசின் குழப்பத்தை காரணம் காட்டி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை எந்த இடத்தில் அமையும் என்பதை இதுவரை அறிவிக்காமல் தாமதம் செய்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்ய ஜூன் 14-ம் தேதி வரை உயர் நீதிமன்ற கிளை கெடு விதித்திருந்தது. 4 மாதம் காலஅவகாசம் முடிந்தநிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மற்ற மாநிலங்களில் அமையவுள்ள ‘எய்ம்ஸ்’க்கான இடத்தை அறிவிக்க மத்திய அரசு தாமதம் செய்யவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் மத்திய அரசு தாமதம் செய்வது, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை அமைக்க ஆர்வம் காட்டவில்லையா? அல்லது வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை.
ஒருமித்த கருத்து இல்லை
இதுகுறித்து நேற்று முன்தினம் மதுரை வந்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வு எங்கள் கையில் இல்லை. மத்திய அரசுதான் முடிவு செய்யும் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.
‘எய்ம்ஸ்’ விவகாரத்தில் மத்திய அரசு - மாநில அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததாலே தற்போது வரை ‘எய்ம்ஸ்’ இடம் தேர்வு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT