Last Updated : 05 Jun, 2018 07:59 PM

 

Published : 05 Jun 2018 07:59 PM
Last Updated : 05 Jun 2018 07:59 PM

வியாழன் முதல் 10 நாட்களுக்கு நெல்லை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வரும் வியாழக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, 3 நாட்கள் முன்பாக, அதாவது 29-ம் தேதியே கேரளாவில் பருவமழை தொடங்கியது. அப்போது முதல் கேரளா, மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், 7-ம் தேதி அல்லது 8-ம் தேதியில் இருந்து பருவமழை தீவிரமடையும், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குதொடர்ச்சிமலையோரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் வானிலை குறித்த பதிவுகளை வெளியிட்டுவரும் பிரதீப் ஜான் தி இந்து ஆன்லைனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை வரும் 7-ம் தேதி அல்லது 8-ம் தேதி முதல் தீவிரமடையும். அதன்பின் அடுத்த 10 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை இருக்கும்.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் நாளை மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், 7-ம் தேதிக்கு பின் பருவமழை தீவிரமடையும் போது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை இருக்காது. சென்னை, வடமாவட்டங்களில் நாளை இடியுடன்கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னைப் பொறுத்தவரை புறநகர்பகுதிகளில் நாளை மழை பெய்யக்கூடும் வியாழக்கிழமைக்கு பின் மழைக்கு வாய்ப்பு இல்லை. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தபின், சென்னையில் வெயிலின் தாக்கமும் இயல்பை ஒட்டியே இருக்கும். அதிகமான வெயில் இருக்காது.

வியாழக்கிழமை அல்லது 8-ம் தேதி முதல் பருவமழை தீவிரமடைகிறது என்பதால், மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மேற்கு கடற்கரைஓர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனால், தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரிக்கலாம்.

மேற்கு தொடர்ச்சிமலையோரத்தில் உள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டத்தின் பகுதிகள், பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கோவை மாவட்டத்தின் சில பகுதிகள், நீலகிரி மாவட்டம், வால்பாறை, சத்தியமங்கலம் பகுதிகளில் கனமழை, முதல் மிககனமழை இருக்கும். அடுத்து வரும் 10 நாட்களில் ஒட்டுமொத்தமாக நாள் தோறும், கனமழை முதல் மிககனழை வரை தொடர்ந்து பெய்யக்கூடும். .

இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x