Published : 05 Sep 2024 07:31 PM
Last Updated : 05 Sep 2024 07:31 PM
சென்னை: விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கட்டணம் ஏதும் நிர்ணயிக்கவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அரிஹரன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: “விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை நீர்நிலைகளை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதிகளை உருவாக்கியும், அதை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. விதிகள் ஏட்டளவிலேயே உள்ளன. சிலைகளை கரைக்கும்போது மிதக்கும் கழிவுகளால் நீர்நிலைகள் மற்றும் கடல் சூழலியல் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி சிலைகளை கரைக்க உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், “தீர்ப்பாயம் நியமித்துள்ள கூட்டுக்குழு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடி, விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கை நீர்நிலைகளை உருவாக்குவது, முன்கூட்டியே, சிலைகளை கரைக்கும் நீர்நிலையை அடையாளம் காண்பது, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கொண்டு சிலைகள் தயாரிப்பதை தடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, சிலைகளை கரைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து, சிலையின் அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிப்பபதை கூட்டுக்குழு நிர்ணயிக்க வேண்டும். அரசால் அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலையை கரைத்தால் அபராதம் விதிக்க வேண்டும். இத்தொகையை, தொடர்புடைய நீர்நிலையை பராமரிக்க செலவிட வேண்டும்,” என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தியது தொடர்பாக இன்று (செப்.5) அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், “சிலைகளைக் கரைக்க கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பதை பொறுத்தவரை பொதுமக்களின் மத வழிபாட்டு உரிமை மற்றும் அவர்களின் உணர்வு சார்ந்தது என்பதால் அதை செயல்படுத்த சட்டரீதியான செயல்முறை தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் கருதி, சிலைகளை கரைக்கும்போது ஏற்படும் மாசுபாடுகளை கண்காணிப்பதை பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிரப்படுத்தி வருகிறோம்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய்சத்யஜித், “விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சிலை கரைப்பின்போது மாசு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுக்கும்,” என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT