Published : 05 Sep 2024 07:02 PM
Last Updated : 05 Sep 2024 07:02 PM

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள், தீபாவளி: அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு உச்சம்

கோப்புப்படம்

சென்னை: விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்து இருக்கைளுக்கான முன்பதிவு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் முன்பதிவு செய்வோருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை, ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு, அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை, குலுக்கல் முறையில் பயணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப்பரிசு போன்றவை வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (செப்.4) மட்டும் 35,140 எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாட்களைஒட்டிய பயணம், தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்பவும், வார இறுதி நாட்களில் பயணிப்பது போன்ற காரணங்களுக்காக முன்பதிவு செய்துள்ளனர். ஒரு நாளில் நடைபெற்ற முன்பதிவில் இதுவே அதிகமாகும். இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 32,910 எண்ணிக்கையில் முன்பதிவு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவலை எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு, “இவ்வாறு முன்பதிவு அதிகரிப்பதை கணக்கில் கொள்வதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களால் பேருந்து இயக்கத்தை சீரிய முறையில் திட்டமிட முடியும்,” என போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x