Published : 05 Sep 2024 06:35 PM
Last Updated : 05 Sep 2024 06:35 PM

“ஊறுகாய் போடுவதை ஒருபோதும் கவுரவக் குறைச்சலாக பார்ப்பதில்லை” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னையில் நடந்த வருவாய், வரி விதிப்பு தொடர்பான கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

சென்னை: “ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பதில்லை,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

2047-ம் ஆண்டை நோக்கிய இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிப் பாதையில் ‘மத்திய நிதியமைச்சரின் - நுண்ணறிவு’ என்ற தலைப்பில் வருவாய், வரி விதிப்பு தொடர்பான கருத்தரங்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் அங்கம் வகிக்கும் ரெவின்யூ பார் அசோசியேஷன் சார்பில் லீலா பேலஸில் இன்று (செப்.5) நடைபெற்றது.சங்க துணைத்தலைவர் டி.ஆனந்த் வரவேற்றார். சங்கத் தலைவர் எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கின் நோக்கம் குறித்து அமைப்புக்குழுத் தலைவர் டி. பானுசேகர் எடுத்துரைத்தார்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “வருமான வரி செலுத்துபவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இந்த பார் அசோசியேஷன் முக்கிய இணைப்புப் பாலமாக விளங்குகிறது. அதற்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வருமான வரி விதிப்பு மற்றும் வருமான வரி செலுத்தும் நடைமுறையை எப்படி எளிமைப்படுத்துவது, எப்படி இலகுவாக்குவது என்பதைப்பற்றி ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்திலும் ஆலோசித்து ஒவ்வொன்றாக அமல்படுத்தி வருகிறோம்.

அதில், அரசுக்கு வருவாய் ஈட்டும் திட்டங்கள் குறித்து இறுதியாகத்தான் ஆலோசிக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி இந்தியாவில் அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் காரணமாக, நொடிப்பொழுதில் இந்தியாவில் இருந்து எங்கு வேண்டுமென்றாலும் பணம் அனுப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வரிவிதிப்பு நடைமுறைகளில் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

இந்த சங்கமும் அதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக மக்களுக்கு எளியமுறையில் வரிவிதிப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வரிச் சட்டங்களுக்கு இணங்குவது குடிமக்களின் கடமை என்றால் வரி செலுத்துவோருக்கு எளிமையான கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பது அரசின் பொறுப்பு. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், 10 பேர் உண்மையான தகவல்களை பரப்புகின்றனர் என்றால் 100 பேர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

நாட்டின் பொருளாதாரம், வரி விதிப்பு போன்ற சரியான தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியபோது இல்லாத ஒன்றை புதிதாக விதிப்பது போல வதந்தி பரப்பினர். ஆனால் தற்போது, அதன் உண்மையான களநிலவரத்தை அனைவரும் புரிந்து கொண்டு விட்டனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலமாக அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்.9ம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 1.47 கோடி பேர் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்துகின்றனர். நேரடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 7.79 கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ‘ஒரே நாடு ஒரே வரி’ திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முடியுமா?, முடியாதா? என்றால் இரண்டுக்குமே என்னிடம் பதில் உள்ளது. செருப்புக்கும் 12 சதவீதம், பென்ஸ் காருக்கும் 12 சதவீதம் வரி என்றால் அது எப்படி சாத்தியமாகும்? என அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் இப்போது, அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும் என்றால் நான் ஜிஎஸ்டி கவுன்சிலை விட்டே விலகி விடுகிறேன். 60 சதவீத நுகர்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவான நுகர்பொருட்களே 28 சதவீத வரி விதிப்பில் உள்ளது.

இன்னும் அதிகமாக பேசினால், ஊறுகாய் போடுகிறவர்களைக் கொண்டு போய் நிதியமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் ஆகும் என்றும், அவரை உடனே பதவியை விட்டு இறக்குங்கள் என்றும் பலர் விமர்சனம் செய்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை ஊறுகாய் போடுவதையும், நிதியமைச்சராக பதவி வகித்து மக்களுக்கு சேவையாற்றுவதையும் நான் ஒருபோதும் கவுரவ குறைச்சலாக பார்ப்பது இல்லை. ஊறுகாய் போடுகிறவர் நிதியமைச்சராக பதவி வகிக்கக்கூடாதா?

கிரிப்டோ கரன்ஸி தொழில்நுட்பம் காலத்தின் கட்டாயம் என்றாலும் போதை கலாச்சாரம், தீவிரவாதம் போன்ற அதில் உள்ள அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மீது கொண்ட பற்றால் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அரசின் செயல்பாடுகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் அந்த திட்டம் வெற்றி பெறும். ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் நல்ல பல ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்கிறேன்” என்றார்.

இறுதியாக ரெவின்யூ பார் அசோசியேஷன் நிர்வாகி ஜெயக்குமார், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சார்பில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைசசர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்நிகழ்வில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் டி. வாசுதேவன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x