Last Updated : 05 Sep, 2024 05:57 PM

4  

Published : 05 Sep 2024 05:57 PM
Last Updated : 05 Sep 2024 05:57 PM

தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் சுங்கச் சாவடிகள்; டோல்கேட் 70 ஆக உயர்வு - NHAI அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் 3 புதிய சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சாலையை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணங்கள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உயர்த்தப்படும். அந்தவகையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரலில் உயர்த்தப்பட வேண்டிய கட்டணம் ஜூன் மாதம் உயர்த்தப்பட்டது.

குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 36 சுங்க சாவடிகளில் 5 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து இம்மாதம் முதல் தேதியில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் 25-க்கும் மேற்பட்டவற்றில் 5 முதல் 7 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டி கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எந்தெந்த இடங்கள்? - இந்தச் சூழலில், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 67-ல் இருந்து 70 ஆக இந்திய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பும், கட்டண விவரமும் இன்று (செப்.5) வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

புதிதாக திறக்கப்பட உள்ள நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில், ஒருமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்வதற்கு ரூ.55 முதல் ரூ.370 வரையும், ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், நாகம்பட்டி சுங்கச்சாவடியில் ஒருமுறை செல்ல ரூ.60 முதல் ரூ.400 வரையும், ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.90 முதல் ரூ.600 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வணிக உபயோகமில்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.340 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலம் கடந்தும் கட்டணம் வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். இந்த சூழலில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை திறக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x