Published : 05 Sep 2024 04:58 PM
Last Updated : 05 Sep 2024 04:58 PM
மதுரை: திருச்சி எஸ்.பி., மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் என்னை கைது செய்தனர். அந்த வழக்கில் நீதித்துறை நடுவர் என்னை விடுதலை செய்தார். இந்த வழக்கில் எனது கைதுக்கு திருச்சி எஸ்.பி.,யான வருண்குமார்தான் காரணம் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமூக வலைதளத்தில் கருத்துத் தெரிவித்தார்.
அந்தக் கருத்துக்கு பின்னூட்டமாக பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.இதையடுத்து எஸ்.பி., மீது சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக என் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கெனவே என்னை போலீஸார் கைது செய்தபோது எனது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போனில் இருந்த ஆடியோ பதிவுகளை மூன்றாம் நபர் வழியாக போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது தொடர்பாக டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார். அரசு தரப்பில், “கடமையைச் செய்த காவல்துறை அதிகாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வருகின்றனர். இது பணியிலுள்ள உயர் அதிகாரிகளை மிரட்டும் செயலாகும். எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது. சாட்டை துரைமுருகன் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிடுகையில், “காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து மனுதாரர் சமூக வலைதளத்தில் தவறாக பதிவிடவில்லை. அதன் பிறகு சிலர் அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதற்கு மனுதாரர் பொறுப்பாகமாட்டார்” என்றார்.
பின்னர் நீதிபதி, “இந்த வழக்கில் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மனுதாரரால் பதிவிடப்படவில்லை. அதேசமயம், எஸ்.பி., வீட்டு பெண்களை தவறாக சித்தரித்து, ஆபாசமான கருத்துகள் அதில் பதிவிடப்பட்டுள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டும். பெண்களை ஆபாச பொருளாக அடையாளப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே, ஆபாச கருத்துகளை பதிவிட்டவர்களை கைது செய்ய வேண்டும். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 3 வாரம் தினமும் திருச்சி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT