Published : 05 Sep 2024 05:39 PM
Last Updated : 05 Sep 2024 05:39 PM

சிஎன்ஜி பேருந்துகளால் ஒரு மாதத்தில் ரூ.7.67 லட்சம் சேமிப்பு: தமிழக அரசு தகவல்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகளால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.7.67 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயுக்கள் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி, தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மாற்று எரிபொருள் மூலம் இயக்கப்படும் பேருந்துகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் சேமிக்கப்பட்ட தொகை குறித்த தகவலை போக்குவரத்துத் துறை எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில், மாநகர பேருந்துகளை ஒரு லிட்டர் டீசல் மூலம் 4.76 கிமீ தூரம் இயக்க முடியும். அதன்படி ஒரு கி.மீ-க்கு ரூ.19.03 செலவாகும். இதுவே சிஎன்ஜி மூலம் 4.78 கிமீ-க்கு இயக்க முடிகிறது. இதற்கு ரூ.18.47 (ஒரு கி.மீ) செலவாகிறது.

இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.2,319 சேமிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் மற்றும் புறநகருக்குள்ளாக மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதால் சேமிப்பு தொகை வெகு குறைவாக உள்ளது. அதேசமயம், பிற போக்குவரத்துக் கழக பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் இயங்குவதால் மைலேஜ் அதிகமாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சேலம் கோட்டத்தில் பெட்ரோல் மூலம் ஒரு கி.மீ இயக்குவதற்கு ரூ.15.80 செலவாகும் நிலையில், சிஎன்ஜி மூலம் இயக்கினால் ரூ.11.24 மட்டுமே செலவாகும். இதனால் கடந்த மாதம் மட்டும் சேலம் கோட்டத்தில் ரூ.2.08 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.

மற்ற கோட்டங்களை ஒப்பிடும்போது சேலத்தில் அதிக தொகை சேமிக்கப்பட்டது. இதேபோல், திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை, கோவை, விழுப்புரம் கோட்டங்களில் முறையே ரூ.1.58 லட்சம், ரூ.1.25 லட்சம், ரூ.1.58 லட்சம், ரூ.46,690, ரூ.68,064 என ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி குறிப்பிட்டு, “சோதனை அடிப்படையிலான முயற்சி ஊக்கமளிக்கிறது. விரைவில் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x