Published : 05 Sep 2024 03:48 PM
Last Updated : 05 Sep 2024 03:48 PM
மதுரை: “தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும்,” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை இன்று (செப்.5) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ரூ.515 கோடி மதிப்பில் 212 நெடுஞ்சாலைகளில் 281 கிலோ மீட்டருக்கு சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, அதில் 200 பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்.
நடப்பு ஆண்டில் ரூ.111 கோடி மதிப்பில் 30 சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. மக்களுக்கான திட்டங்களில் முதல்வர் அதிமுக, திமுக என பிரித்துப்பார்க்க மாட்டார். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை அப்பலோ மேம்பாலப் பணிகள் 30 சதவீதமும், மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவீதமும் முடிவுற்றுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், அவசர கோலத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாலும் விபத்துகள் நடக்கின்றன. அதிமுக ஆட்சியில் விதிமுறைகளை மீறி 70 ரயில்வே மேம்பாலங்கள் அவசர கோலத்தில் கட்டப்பட்டன. தற்போது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 30 ரயில்வே மேம்பாலங்களின் பணிகள் முடிக்கப்பட்ட்டுள்ளன. நில எடுப்புக்காக 5 சிறப்பு டிஆர்ஒ-க்கள் நியமிக்கப்பட்டு பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளன. அவனியாபுரம் முதல் நெல்பேட்டை வரையில் மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தெற்கு வாசல் - வில்லாபுரம் இடையே கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.
நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது அமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கிறது. ஆகவே நாங்கள் யாரையும் கண்டு பொறாமை கொள்ளமாட்டோம் அவர்களை தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். மக்களின் உரிமைகளுக்காக எந்தக் கட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதை பொறுத்து தேர்தலில் அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT