Published : 05 Sep 2024 03:25 PM
Last Updated : 05 Sep 2024 03:25 PM
திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவருக்கான கடமையில் இருந்து தவறியதாக தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தவர் பி.வெங்கடேசன். இவர், பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பி.வெங்கடேசன், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதோடு, அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார் என்பது ஊரக வளர்ச்சித் துறையினரின் விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. இதனால், பி.வெங்கடேசன், தொடர்ந்து தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதோடு தனது அதிகாரத்தை மேலும் துஷ்பிரயோகம் செய்வார்.
இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவர் பி.வெங்கடேசனை 03.09.2024 முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT