Published : 05 Sep 2024 03:20 PM
Last Updated : 05 Sep 2024 03:20 PM
மதுரை: முதல்முறையாக சிறை செல்வோருக்கு தனி சிறை அமைப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். வியாழக்கிழமை காலை ஒரு வழக்கில் மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, “மதுரை மத்திய சிறையில் முதன்முறை சிறைக்கு வருபவர்கள் தனியாக வைக்கப்படுகிறார்களா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு சிறைத்துறை துணை தலைவர், “மதுரை மத்திய சிறையை பொறுத்தவரை தண்டனை கைதிகள், தனியாகவும் விசாரணை கைதிகள் தனியாகவும் அடைக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது.” என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, “கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஜாமீன் கோரி வந்த சில வழக்குகளை விசாரித்த போது, அவர்கள் சிறிய வழக்குகளில் சிறையில் இருந்தபோது பெரிய குற்றவாளிகளுடன் ஏற்பட்ட தொடர்பில் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆகவே, குற்றச் செயல்களில் ஈடுபட்டு முதன்முறை சிறைக்குச் செல்வோருக்கு என தனியாக சிறைகளை அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். இதனால் அவர்கள் பெரும் குற்றவாளிகளாக மாறுவதை தடுக்கலாம். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை நீதிமன்றம் வழங்கும். அதன் பின்னர் அதுதொடர்பாக ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT