Published : 05 Sep 2024 02:55 PM
Last Updated : 05 Sep 2024 02:55 PM

“அடுத்து நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்திக்கும்” - டி.ராஜா கருத்து

டி. ராஜா

சென்னை: அடுத்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்திக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (வியாழக் கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா கூறியதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் முடிவு அரசியல் ரீதியாக பாஜகவுக்கு தோல்வியை கொடுத்துள்ளது. 400 இடங்கள் கிடைக்கும், பாஜவுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என பிரதமர் கூறிய நிலையில் பாஜகவால் அறுதிப்பெரும்பான்மை கூட பெற முடியவில்லை.

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கின்றனர். இந்த ஆட்சி நிலையாக இருக்கப்போகிறதா என்பதே கேள்விக்குறி. ஹரியாணா ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்திப்பது உறுதி. விவசாயிகள் போராட்டங்களில் ஹரியாணா மக்கள், முன்னணியில் இருந்தனர். இப்போதும் ஹரியாணா மாநிலத்தில் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு இருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடினர். அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து பிரதமர் கருத்தும் தெரிவிக்கவில்லை; கவலைப்படவுமில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரை மாநிலம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டது. சிறப்பு உரிமைகளும் மறுக்கப்பட்டன. பாஜக அரசு பின்பற்றும் காஷ்மீர் கொள்கை படுதோல்வியை கண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் மக்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறையில்லாத ஆட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என மக்கள் களத்தில் நிற்கின்றனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பாஜக தோல்வியடைவது உறுதி. சுதந்திர தின விழாவில், 2047-ல் வளர்ந்த மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறப் போகிறது என்றார் பிரதமர். இந்தியாவின் வறுமை தொடர்கிறது. ஐநா சபையின் குறிக்கோளை இந்தியா எட்டவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.

பாஜக அரசு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. விலைவாசி உயர்கிறது. பணவீக்கம் அதிகரிக்கிறது. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் பொருளாதார நாடாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க துணை போகும் கொள்கைகள் தான் இருக்கின்றன. செபியின் தலைவரே அதானி குழுமத்தில் பங்குதாரராக இருக்கிறார். பட்டினி குறியீட்டில் 111-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதற்காக பிரதமர் அவமானப்பட வேண்டும். ரேஷன் அட்டையை பெறுவதே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இ-கேஒய்சி பெறுவது அவ்வளவு சவாலாக இருக்கிறது.

இதுபோன்ற கொள்கைகளுக்கு எதிராக செப்டம்பர் முதல் வாரத்தில் தேசம் தழுவிய அளவில் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். பாஜக ஆளும் மாநிலங்களில் பசு இறைச்சி வைத்திருந்ததாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. நமது அரசியல் சட்டமே மதச்சார்பற்றதாக இருக்கிறது. அரசியல் சட்டத்தை பாஜக ஆர்எஸ்எஸ் ஏன் கேள்வி கேட்கின்றனர்?

அரசியல் மாற்றத்துக்காக மக்கள் போராட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் கொந்தளிப்பான சூழலில் இருக்கிறது. மணிப்பூருக்கு செல்லாமல் பிரதமர் வெளிநாடு செல்கிறார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இவர்களை காக்க பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசினார். தமிழக மீனவர்களின் அவல நிலையை பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பின்பற்றும் வெளிநாட்டுக் கொள்கை எப்படிப்பட்ட கொள்கையாக இருக்கிறது. அத்தகைய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இயற்கை பேரிடரால் பல்வேறு மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கேரளாவுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னரும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை.

தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இந்தப் பாதிப்பை சமாளிக்க போதிய உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உடல் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். கல்வியை பயன்படுத்தி மத்தியில் அதிகாரத்தை குவிக்க பாஜக முயற்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளாததால் தமிழகத்துக்கான நிதியை வழங்காதது கண்டிக்கத்தக்கது.

பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு என்ன என கேள்வி எழுப்ப வேண்டும். இண்டியா கூட்டணி ஆட்சியமையும் போது கொள்கைகளை மறுவரை செய்ய நடவடிக்கை எடுப்போம். தோழமையோடு செயல்பட்டாலும் சறுக்கல் ஏற்படும் போது சுட்டிக்காட்ட தயங்கியதில்லை. தமிழக ஆளுநர் முன்வைக்கும் கருத்துகள் அபத்தமானவை.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநில ஆளுநர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர். ஆளுநர் பதவி தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சந்திப்பின்போது கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், நிர்வாகிகள் ரவீந்திரநாத், சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x