Last Updated : 05 Sep, 2024 02:22 PM

2  

Published : 05 Sep 2024 02:22 PM
Last Updated : 05 Sep 2024 02:22 PM

“தமிழக பாடத்திட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா?” - சபாநாயகர் அப்பாவு சந்தேகம்

சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி​: தமிழகத்தின் பாடத்திட்டம் குறித்து தமிழக ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை டவுண் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் அள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவுவிடம் மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, “ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை.

‘சந்திரயான் 3’ திட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு பெருமை சேர்த்தது. வீரமுத்துவேல் என்பவர் இந்தத் திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். அவர் தமிழ்வழி கல்வி கற்றவர். அரசுப் பள்ளியில் பயின்றவர். இவர் மட்டுமல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை, தற்போதுள்ள வனிதா, நிகர் ஷாஜி, நாராயணன், ராஜராஜன், சங்கரன் உள்ளிட்ட விஞ்ஞானிகளில் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள்தான் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா?” என்றார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, “தமிழக முதல்வர் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளை கடந்த 6 மாதத்துக்கு முன்பு அழைத்து அவர்களை பாராட்டி ரூ.25 லட்சம் மற்றும் விருது வழங்கினார், அதோடு மட்டுமின்றி இந்த விஞ்ஞானிகளின் பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்” எனக் கூறினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணை மேயர் ராஜூ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x